இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
91
லால்குடி கோபாலகிருஷ்ணன்
இராமாயணத்தில் தசரதருக்கு, முனிவரின் சாபமே புத்திர தோஷத்தை நீக்கியதுபோல, ஜாதகத்தில் அமையும் சில தோஷங்களே பிற தோஷங்களைச் செயலிழக்கச் செய்யும். ஒரு ஜாதகத்தில் புத்திர தோஷமும் காணப்பட்டு, புத்திரரால் தொல்லை ஏற்படும் என்ற அமைப் பும் இருந்தால், தொல்லை தருவதற்கென்றே ஒரு மகன் பிறப்பான். அந்த ஜாதகத்தில் புத்திர தோஷம் செயலிழக்கும். ஐந்துக்குடையவன் நீசமடைந்து, 5-ல் பாவிகள் அமர்ந்து சுபர் பார்வை பெறாமல்போனால், புத்திர தோஷம் உண்டாகும். அதே ஜாதகத்தில் 1, 5, 10-ஆம் பாவங்களும், கர்மகாரகனாகிய செவ்வாயும் தொடர்பிலிருந்தால், அந்திமக் காரியங்களைச் செய்யவாவது ஒரு மகன் பிறப்பான். அந்த ஜாதகத்தில் புத்திர தோஷம் அடிபட்டுப் போகும். ஒரு ஜாதகத்தில் தோஷங்களை ஆராயும் போது, எந்த தோஷம் வரமாக மாறும் என்பதை ஆராய்ந்தே பலன்களை உறுதிசெய்ய வேண்டுமென்பதே "கந்தர்வ நாடி'யின் நிலைப்பாடு.
""நீலகண்டரே! மனிதன் பாவத் தின் சுமையைக் குறைத்துக் கொள்வதற்கான உபாயத்தை, அறிவில் எளியோரும் அறியுமாறு உபதேசித்தருள வேண்டும்'' என்று அன்னை மதுரசுந்தரநாயகி திருஇரும்பை எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு மாகாளநாதரைப்பணிந்து கேட்டாள்.
அடியாருக்கு நல்லார் உரைத்தது- ""அச்சமே பாவத்தின் மூலகாரணம். அதுவே துன்பத் தையும் பொறாமையையும் தூண்டக்கூடியது. எவரும் தன்னைக்கண்டு தானே பொறாமையும் துன்பமும் அடைவதில்லை. அவனுக்கு அவன் மட்டுமே சகாயமாக அமைவதால், அவனே அவனுக்கு ஆத்மசகா. (ஆத்ம நண்பன்). பித்தர்கள் மட்டுமே தன் நிழலைக்கண்டு தானே அச்சம டைவார்கள். மலைகளையும், கடலையும் கண்டு பிரம்மித்துப்போகும் மனிதன், தானும் அங்கிருப்பதை மறந்துவிடு கிறான். மலையும் கடலும் தன் பார்வையில் ஒடுங்கியிருப்பதை உணரமறுக்கிறான். தானே பிர பஞ்சம் முழுவதும் வியாபித்திருப் பதை அறிந்து அச்சம் தவிர்த்தால், பாவம் அவனை அணுகாது.''
""சத்தியவாகீசுவரரே! "அர்த் தஸூசி' எனும் தாண்டவத்தின் லயமாகிய மூல நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், புனர்பூசம் நான் காம் பாதத்தில் செவ்வாயும், மகம் முதல் பாதத்தில் சனியும், சித்திரை இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருக்க, ஸ்வாதி இரண்டாம் பாதத்தில் குருவும், ஸ்வாதி நான் காம் பாதத்தில் புதனும், அனுஷம் நான்காம் பாதத்தில் சந்திரனும் அமர்ந்திருக்கும் அமைப் பைப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று ஒழிந்தியாப் பட்டு எனும் திருத்தலத்தில் அருள்புரியும் அரசிலிநாதரை அன்னை பெரியநாயகி வேண்டிப்பணிந்தாள்.
தாண்டேஸ்வரர் உரைத்தது- ""ஐமாவதியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் நகைமுகன் எனும் பெயருடன், ஆதனூர் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவனுக்குத் திருமணம் முடிந்து, சிறிது காலத்திலேயே அவன் மனைவி தீராத நோயில் சிக்குண்டாள். வாரிசு வேண்டி நகைமுகன் மறுமணம் செய்துகொண்டான். புதுமையின் மோகத்தில் பழமை கசந்தது. முதல் மனைவியை வெறுத்து ஒதுக்கினான். முதல் மனையாளாக வந்தவள் வெறும் பணியாளாக மாறினாள். நாற்றங்காலில் செழித்த செந்நெல் நடவில் நாசமானதுபோல, பிறந்த வீட்டில் போற்றப்பட்டவள் புகுந்த வீட்டில் தூற்றப் பட்டாள். மனம் நொந்தாள். அவள் சாபத்தால் நகைமுகனுக்கு புத்திர பாக்கியம் எட்டாக் கனியானது. காலத்தின் வெம்மையால் காய்ந்து சருகானான்; நோயுற்றான். விதியின் மடியில் மரணித்தான். உடல் தீக்கிரையானது. முதலை யின் பிளந்த வாயைப்போன்ற நரகம் அவனை உள்வாங்கியது. "அந்ததாமிஸ்ரம்' எனும் நரகத் தில் பலகாலம் அல்லலுற்றான். முடிவில் உடலெனும் ஆடை போர்த்தி உலகெனும் கர்ம பூமியை அடைந்தான். எழிலன் எனும் பெயருடன், வளவனூர் என்ற ஊரில் பிறந்தான்.
இளமையின் இனியபொழுதில் காலடி வைத் தான். முன்வினைப்பயன் இளமையை முந்திக் கொண்டது. தொழுநோய் அவனைத் தொழுது ஏற்றது. வளரும் பருவத்தில் அங்கங்கள் குறைந் தன. எழிலன் எழில் இழந்தான். மூடிய மலருக் குள் வாடிய வண்டுபோல, விதியின் கைகளில் அகப்பட்டான். வாழ்க்கையின் இருளில் மூழ் கினான். முற்பிறவியில், * சந்திரன்போல மனைவி களிடம் பாரபட்சம் காட்டியதால் துன்புறு கிறான். கார்த்திகை மாதம், சோமவார விரத மிருந்து பூஜை செய்தால் நோயின் தாக்கம் குறையும்.
* சந்திரன் பெற்ற சாபம்- தன் மனைவிகளிடம் பாரபட்சம் காட்டி தட்சனிடம் பெற்ற சாபத்தால் நாளுக்குநாள் தேய்ந்துகொண்டே போனான்.
(வளரும்)
செல்: 63819 58636
__________________
நாடி ரகசியம்
1. மூல நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் புதனும் சுக்கிரனும் கூடியமைந்தால், சுயதொழிலில், வெற்றிக்கொடி நாட்டுவார்.
2. மூல நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், புனர்பூசம் நான்காம் பாதத்தில் குருவும் அமையப்பெற்ற ஜாதகர் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவார். 3. மூல நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும் சனியும் செவ்வாயும் இணைந்திருக்கும் ஜாதகருக்கு 40 வயதிற்குப் பிறகே வாழ்க்கை வளமாகும். கேள்வி: அதிர்ஷ்டமான யோகப்பலனை ஜனன ஜாதகத்தில் கண்டறியும் முறையை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா? பதில்: "திருஷ்டம்' என்றால் கண்களுக்குத் தெரிவது; "அதிருஷ்டம்' என்பது கண்களுக்குத் தெரியாதது. எதிர்பாராத நிகழ்வுகள் எல்லாமே அதிருஷ்டம்தான். ஒரு ஜாதகத்தில் எட்டாம் பாவம் மட்டுமே எதிர்பாராத சம்பவங்களைச் சுட்டிக்காட்டும் 11, 8, 3-ஆம் பாவங்களின் தொடர்பு, ஒருவர் திடீரென்று காணாமல் போவதைக் குறிக்கும். கோர விபத்து, குற்றத்தொழில், பரிசு பெறுதல், எதிர்பாராத வரவு அல்லது எதிர்பாராத நஷ்டம், திடீர்ப்பயணம், மரபு மீறுதல், புதையல் கிடைப்பது, பூதப்பிரேதத்தால் ஏற்படும் தொல்லைகள், செய்வினை போன்றவற்றை எட்டாம் பாவத்தை மூல பாவமாகக்கொண்டே அறியமுடியும். பிரசன்ன ஆரூடத்தில், காணாமல் போன மனிதர் அல்லது பொருட்களைப்பற்றிய விவரங்களையறிய எட்டாம் பாவமே ஆராயப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் லக்ன பாவத்திற்குச் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது எட்டாம் பாவம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.